புதிய அரசியல் கட்சியை ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளதாக நடிகர் விஜயகாந்த் தெரிவித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய திங்கள்கிழமை அதிகாலை வந்த அவர், கோயிலில் நிருபர்களிடம் கூறியது:
புதிய அரசியல் கட்சித் தொடங்குவது உறுதி. ஜூன் மாதத்தில் கட்சியைத் தொடங்கலாம் என எண்ணியுள்ளேன். கால, நேரம் கனிந்து வருவதற்காகக் காத்திருக்கிறேன். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாகவே அரசியல் கட்சியைத் தொடங்க வாய்ப்புண்டு.
எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. கடவுள் நம்பிக்கை இருந்தாலும் அடிக்கடி கோயிலுக்குச் செல்லும் வழக்கம் இல்லை.
பெற்றோரையும், கடவுளையும் வீட்டிலேயே தினந்தோறும் வழிபடுவேன். ஏழைகளுக்கு உதவினால் இறைவன் அனுகிரகம் கிடைக்கும் என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உண்டு. அதனாலேயே மருத்துவ முகாம்களை நடத்த உள்ளேன். இம் முகாம்களில் 1 கோடிக்கும் மேற்பட்ட ஏழைகள் பயனடைவார்கள்.
படங்களுக்கு தமிழ்ப் பெயர் வைக்காவிட்டால் படத்தைத் திரையிட அனுமதிக்க மாட்டோம் என சிலர் அறிவித்துள்ளனர். படங்களைத் திரையிட அரசு முழுப் பாதுகாப்பு அளிக்கும் என முதல்வர் அறிவித்துள்ளார். எனவே இப் பிரச்சினையில் நடிகர் சங்கம் தலையிட வேண்டிய அவசியம் இருக்காது. இதையும் மீறிப் பிரச்சினை எழுந்தால் நீதிமன்றத்தை நாடுவோம்.
திருட்டு விசிடி ஒழிக்கப்பட்டதால் திரைத்துறையினரின் பிரச்சினைகள் பெருமளவு குறைந்துள்ளன. நடிகர்கள் சங்கத்துக்கு நிரந்தரக் கட்டடம் கட்டும் பணி முக்கியமானது. அதன் மூலம் சங்கத்துக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும். அதற்கான முயற்சியில் தற்போது நான் ஈடுபட்டுள்ளேன்.
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்க தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் நான் ரூ.10 லட்சத்தை அளித்து விட்டேன். அப்பணத்தை அவர்கள் அப்படியே வைத்துள்ளனர். மற்ற நடிகர்கள் அளித்த நிதி முதல்வரின் நிவாரண நிதியில் சேர்க்கப்பட்டிருக்கும் என்றார் விஜயகாந்த். அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் உடன் வந்திருந்தனர்.
கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் காரிலேயே அவர் கிரிவலம் சென்றார்.