Friday, March 28, 2008

தசாவதாரம் தீபாவளியன்று கலைஞர் டிவியில்

கமலின் பிரமாண்டமான தசாவதாரத்தை வாங்க கடந்த சில நாட்களாக பேச்சு வார்த்தை நடந்து வந்தது. கலைஞர் டி.வி. நிர்வாகத்தினரும் தசாவதாரம் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரனும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் நேற்று உடன்பாடு ஏற்பட்டது. தசாவதாரம் கலைஞர் டி.வியில் தீபாவளி அன்று ஒளிபரப்பாகவுள்ளது.
 
இந்த படத்தில் கமலஹாசன் பத்து வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அசின் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். மல்லிகா ஷெராவத், ஜெயப் பிரதா, நெப்போலியன், சந்தான பாரதி, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும் நடிக் கின்றனர். கே.எஸ். ரவிக்குமார் இயக்குகிறார்.
 
இதுவரை இல்லாத அளவுக்கு அதிக செலவில் இப்படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. பிரமாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடக்கிறது. அமெரிக்காவில் உள்ள விஞ்ஞான ஆராய்ச்சி மையத்திலும் படப்பிடிப்பு நடந்தது. மலேசியாவில் 20 அமெரிக்க அழகிகளுடன் கமலும், மல்லிகா ஷெராவத்தும் நடனமாடும் காட்சியொன்றும் ஆடம்பர நடன கிளப் ஒன்றில் படமாக்கப்பட்டது.
 
747 ஜெட் விமானத்துக்குள் கமலஹாசன் ஊடுருவும் காட்சி யொன்றும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு இறுதி கட்டத்தை அடைந் துள்ளது.
 
இதற்கிடையே படத்தின் வெளியீடு ஆகஸ்ட் மாதம் தள்ளிப் போயிருக்கிறது. சுதந்திர தின சிறப்பாக கமலின் தசாவதாரம் ரசிகர்களை மகிழ்விக்கும் என்று நம்பப்படுகிறது.

Wednesday, March 05, 2008

பெண்கள் விஷயத்தில் கே.பாலசந்தர்

இயக்குநர் பாலச்சந்தரின் கதைகளின் முடிவு வேண்டுமானால் சமூகத்தின் பழைய மதிப்பீடுகளோடு உடன்படலாமே தவிர, படம் முழுவதும் பெண்களையும், பெண் விடுதலைச் சிந்தனைகளையும் முன்னோக்கி நகர்த்துகின்ற ஓர் உறுதியான தன்மை அவரின் அனைத்து படங்களிலுமே இழையோடி இருக்கும். இதனைச் சற்று தெளிவுபடுத்திக் கொள்ள மிகுந்த வெற்றியினைப் பெற்ற அவரது மூன்று படங்களைச் சிறிய ஆய்வுக்குட்படுத்தலாம்.

1969ம் ஆண்டு வெளிவந்தது 'இருகோடுகள்' எனும் திரைப்படம். இரு மனைவியர் கதை. பாலச்சந்தரின் பெரும்பாலான படங்களில் ஆண்கள், மனைவி எனும் உறவுக்கு வெளியே திருமணத்திற்கு முன்போ, பின்போ வேறு பெண்ணின் உறவையும் கொண்டிருந்ததாகக் கதைகள் இருக்கும். இந்த யதார்த்தமான அடிப்படையே அவரது படைப்புகளின் பெருத்த வெற்றிக்கும் காரணமாக அமைந்தது.

அந்தப்படம் வெளிவந்து நாற்பதாண்டுகள் கழிந்த இந்நிலையில் கூட பெரிய மனிதர்கள், தலைவர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் என்போரின் வாழ்வில் நிகழ்ந்த இரு மண நிகழ்வினை மூடி மறைப்பது அல்லது அது ஆண்களுக்கே உண்டான உரிமை என்றளவில்தான் சமூக அமைப்பு அன்றும் இருந்தது, இன்றும் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இவ்வாறிருக்க, அந்நிகழ்வை, அக்காலத்திலேயே, பெண்ணிய நோக்கோடு கையிலெடுத்த பாலச்சந்தர் அவர்களின் தொலைநோக்கும், தெளிவும், துணிவும் எத்தகைய போற்றுதலுக்குரியது என்பது ஆழ யோசிக்க தீர விளங்கிவிடும்.

இருகோடுகள் கதை இன்னொருவரிடமிருந்து பெறப்பட்டது என்றபோதும், அதைச் சாதுரியமாகக் கையாண்டு முத்திரை பதித்தவர் இயக்குநர் தானே? அப்படத்தில் முதல் மனைவி இறந்ததாகக் கருதி இன்னொரு பெண்ணை மணம் செய்திருப்பான் நாயகன். இரண்டாவது மனைவிக்கு இரு மகன்களும், ஒரு மகளும் பிறந்த நிலையில் முதல் மனைவி இவனுக்குப் பிறந்த மகனோடும், மாவட்ட ஆட்சியர் எனும் தகுதியோடும் கணவன் இருக்கும் ஊருக்கே வந்து சேர்வாள்.

அதன் பின்னர் அந்த மூன்று பாத்திரங்களின் உணர்ச்சிப் போராட்டமே கதை. முடிவில் முதல் மனைவியின் மகன் எதிர்பாராவிதமாக இறந்துபோக, இரண்டாம் மனைவியே தனது மகனை அவளோடு சேர்த்து வைத்து அவர்களிருவரையும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கதை முடியும். இதில் பாலச்சந்தரின் முத்திரை என்ன?

ஆயிரக்கணக்கான ஆண்கள் இரு மனைவியரோடும், கூடவே மனைவியர் அல்லாத சிலரோடும் வாழ்க்கை நடத்த அனுமதி தந்திருக்கும் இந்த ஆணாதிக்கச் சமூகத்தைத் தோலுரித்துக் காட்டி இருப்பார். இப்படம் வெளிவந்த நாட்களில் ஆண்களின் இருதார மணம் சமூகச் சூழலில் சாதாரண நிகழ்வாக இருந்தது. திரைப்படங்களிலோ இருவரில் ஒருத்தியைக் காப்பாற்ற காதலியையோ அல்லது மனைவியையோ சாகடித்து விடுவார்கள். ஆனால் இயக்குநர் பாலச்சந்தர் தமது படங்களில் பெண்ணுக்கு மரியாதை வேண்டும் ; அவளது உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கவேண்டும் என்ற முடிவோடு அவளுக்கான சுயமரியாதை உணர்வினையும் வலியுறுத்தி இருப்பார்.

ஆனால் இரண்டு பெண்கள் ஒரே ஆணுடன் குடித்தனம் நடத்துவது அவர்களின் தன்மானத்திற்கு இழுக்கு என்பதை அழுத்தமாகச் சொல்லி படத்தை முடிப்பார். அப்படத்தில் ஒரு பாடல், மனைவியர் இருவரும் சேர்ந்து பாடுவதுபோல வரும். 'பாமா, ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக' என முதல் மனைவியும், இரண்டாவது மனைவி 'அவன் ருக்மணிக்காகவே' என்பது போலவும் பாடல் நீளும்.

அப்பாடலில் 'இந்தக் கேள்விக்கு பதில் ஏது?... சிலர் வாழ்வுக்குப் பொருள் ஏது...?' என்ற கேள்வியும் 'அது உறவில் மாறாட்டம், இது உரிமைப்போராட்டம்' என்ற பதிலும் இருக்கும். இந்தக் கேள்விகளும், பதில்களும் சரிதானா? உண்மையான பதில்களை அறிவுள்ள பெண்கள் சிந்திக்க வேண்டும் என்ற மறைமுகச் செய்தியுடன் அப்பாடலும் படமும் முடிவடையும். பாலச்சந்தரின் தொலைநோக்குதான் அங்கு முத்திரை பதித்திருக்கிறது.

அடுத்து 'அரங்கேற்றம்' என்ற படம் 1973ல் வெளிவந்தது. பார்ப்பனர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த அந்நாளில் பார்ப்பனரான பாலச்சந்தர், பார்ப்பனப் பெண் ஒருத்தியே பாலியல் தொழிலில் வீழ்ந்து, அழிவதைப் படமெடுத்து பார்ப்பனச் சமூகத்தையே அதிர்வுக்குள்ளாக்கியவர். அவரது உள்ளார்ந்த நேர்மைக்கு இந்தப்படம் சரியான சான்று. கதை முடிவில் பாலியல் தொழில் செய்தவள் மனநிலை பாதிக்கப்பட்டு சாகடிக்கப்படுவது அக்காலச் சமூக சூழலோடு பாலச்சந்தர் செய்துகொண்ட சமரசம்.

இக்காலத்திலும் சமரசங்கள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை எனும்போது திரைத்தொழிலில் வணிக நோக்குடன் கருத்து ரீதியில் சமரசம் செய்ததில் தவறொன்றும் இல்லை. ஒரு பெண்ணின் ஆளுமையை-ஆற்றலை- அறிவார்த்தத்தை இறுதிவரையில் வளர்த்தெடுத்துச் செல்லும் அற்புதப்படம் அது. ஆணாதிக்கச் சமூகம் ஒரு பெண்ணை எப்படியெல்லாம் பந்தாடி, அவளை அழித்தொழிக்கும் என்பதற்கோர் எடுத்துக்காட்டே அப்படம். பெண்களின் சிந்தனையினைக் கட்டவிழ்த்துவிட முயன்ற படம் அது என்பது மிகையல்ல. குடும்பக் கட்டுப்பாடு பரப்புரைக்கெனவும் அப்படம் எடுத்தாக அவரே சொன்னதாகவும் ஒரு செய்தி உண்டு.

மூன்றாவதாக 'சிந்து பைரவி' (1985) - மிகுந்த வெற்றியினைப் பெற்ற படம். இசை மேதையான ஒரு நடுத்தர வயதுக்காரனிடம் இளவயது நாயகி காதல் கொள்கிறாள் என்பதை விட அந்த இசைமேதைதான் இவளது இசைஞானத்தில் மயங்கி காதல் கொள்கிறான் என்பதே சரி. ஒரு நெருக்கடியான சூழலில் இருவரின் உணர்வுமீறலில் தாய்மை நிலையினை அடையும் நாயகி, அக்கருவைக் கலைக்க மருத்துவமனை செல்கிறாள்.

முன்பே அங்கிருந்த இசைமேதையின் மனைவிக்குக் குழந்தை பிறக்கும் தகுதியை இல்லை என்பதை எதேச்சையாக அறிகிறாள். இசைக்கலையில் இவளுக்குள்ள அபரிமிதமான ஞானம் காரணமாக, அந்த இசைமேதைக்குத் தன் மூலமாகவாவது ஒரு வாரிசு கிடைக்கட்டுமே என்ற பெருந்தன்மையோடு எவருமறியாமல் கருவை வளர்த்துக் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அந்தக் குழந்தையைக்கொண்டுவந்து இசைமேதையின் மனைவியிடம் ஒப்படைக்கும்போது, தனது கணவனை இரண்டாம் மணம் புரிந்துகொள்ளுமாறு அவள் எவ்வளவோ வேண்டிக்கேட்ட பின்னும் அதனைக் கடுமையாக நிராகரித்து, கம்பீரத்துடன் வெளியேறுகிறாள்.

'இரண்டு பெண்டாட்டிக்காரன்' என்ற பட்டப்பெயரை தான் மதிக்கும் அந்த இசைமேதை பெறவேண்டாம் என்று சொல்லியும் விலகுகிறாள். இங்கும் பெண்ணின் உணர்வை உயர்த்திப் பிடித்து சமூகத்தில் ஆணுக்கிருக்கும் சலுகைகளைக் கோடி காட்டுகிறார் இயக்குநர். அப்படத்தில் அந்த நாயகியைக் காதலித்து ஓயாமல் சுற்றிவரும் ஒரு ஆண் பாத்திரத்தையும் படைத்து அந்த நாயகியின் எதிர்காலச் சூழல் எவ்வாறு அமையும் என்பதையும் நமக்குச் சொல்லாமல் சொல்லி இருப்பார். அந்த மறைமுகச் செய்திதான் இருபதாண்டுகள் கழித்து சிந்துபைரவி-பகுதி 2 என சின்னத்திரையில் தொடராக வந்து மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த இதழ் களஅதிர்வுகள் பகுதியில் நண்பர் பொன்.ஏழுமலை குறிப்பிட்டிருப்பதைப் போல 'அக்மார்க்' பார்ப்பனராக இருந்தும்கூட பாலச்சந்தர் இவ்வாறெல்லாம் மிகுந்த தொலைநோக்குப் பார்வையுடன் பெண்ணியச் சிந்தனைகளை வளர்த்தெடுத்து வந்திருக்கிறார். அவருக்குப் பெண்ணினமும், தமிழகப் பெண்ணுலகும் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது என்பதில் அணுவளவும் ஐயமில்லை.
 
 
நன்றி  பெண்ணீயம் இதழ்