மானங்கெட்ட தமிழ் நடிகர்கள்
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினி வெறிபிடித்த தமிழனுக்காக பரிந்து பேசவில்லை என்று கண்டித்தார்கள். இப்போது பேசியபோது அவரை ஆதரிக்க யாருமில்லை. ரஜினி வந்தாக வேண்டும், ரஜினி பேசியாக வேண்டும் என்று வாய்க்கு வந்தபடி பேசிய நடிகர்கள், இப்போது ரஜினிக்கு பிரச்னை என்றவுடன் மானங்கெட்டு மறைந்து ஒளிந்து நிற்கிறார்கள்.
இங்கே பெங்களுரில் தினமும் ரஜினி கொடும்பாவி கொளுத்தப்படுகிறது. ஏதாவது ஒரு அமைப்பு தமிழ் சினிமா நடிகர்களை உதாசீனப்படுத்திவிட்டு ரஜினியை மட்டும் திட்டி அறிக்கை விடுகிறது. "ரஜினி பேசிய பேச்சால் கன்னடர்கள் மனம் புண்பட்டுள்ளது. கன்னடர்களை தாக்கி பேசவில்லை என்று ரஜினி கூறி, மறுபடியும் தவறிழைக்க வேண்டாம். உண்ணாவிரதத்தில் ரஜினி பேசிய பேச்சின் வீடியோவை அவர் மீண்டும் பார்க்க வேண்டும். சென்னையில் ரஜினி கன்னடர்களை இழிவாக பேசியது உண்மை. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி விரும்பினால் கன்னட மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்," என்றெல்லாம் ஆவேசமாக பேசுகிறார்கள்.
மற்ற தமிழ் சினிமா நடிகர்களைப் பற்றி இங்கே பேச்சே இல்லை. பெங்களுரில் எனது படம் ஓடாவிட்டாலும் பரவாயில்லை எது நியாயமோ அதைத்தான் பேசுவேன் என்று ரஜினி கூறியிருக்கிறார். அவரது படம் ஓடாது என்பதற்காகத்தான் கன்னடர்களுக்காக பரிந்து பேசுகிறார் என்று ஆறு ஆண்டுகளாக பேசி வந்தவர்களின் முகத்தில் கரியை பூசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவினரின் உணர்வுக்கு மதிப்புக் கொடுத்து அவர்களோடு இணைந்து உண்ணாவிரதம் இருந்தமைக்கும் ரஜினிக்கு சொல்லடி கிடைத்துவருகிறது. எந்த பிரச்னையாக இருந்தாலும் ரஜினி தனியாகத்தான் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது பரிதாபத்து்க்குரிய உண்மை.
பிழைப்புக்காக ஊரை விட்டு மாநிலத்தை விட்டு நாட்டை விட்டு வேறு இடங்களில் வசிக்கும் எல்லா தமிழர்களுக்கும் இந்த நிலை வரத்தான் போகிறது.