Well done Captain!
மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய கட்சி துவங்கியிருக்கிறேன். பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வரவேண்டும் என்பதற்காக கருத்து சொல்ல மாட்டேன். நாம் சொல்லும் கருத்திற்கு நியாயமான காரணம் இருக்கிறதா, மக்களுக்கு அதனால் என்ன பிரயோஜனம் என்று பார்ப்பேன்.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை அடிக்கடி உயர்த்தி வருகிறது. கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றிருப்பவர்கள், அதிலிருந்து கொண்டே இங்கு எதிர்ப்பு தெரிவித்து பெயருக்கு போராட்டம் நடத்துகின்றனர். மக்கள் பிரச்னையில் கருத்து சொல்லாமல் நான் மவுனமாக இருப்பதாக சொல்கிறீர்கள். பெட்ரோல், டீசல் உயர்வை கண்டிக்கிறோம். மத்திய அரசு கூட்டணியில் சில கட்சிகள் உள்ளன. அவை இந்த பிரச்னையை எதிர்க்கவில்லை. ஆனால் வெளியில் போராட்டம் நடத்துகின்றன. இது ஏமாற்று வேலை. இதனால் மக்களுக்கு ஏதும் பிரயோஜனம் உண்டா? உயர்த்தப்பட்ட விலை இருபத்தைந்து பைசா கூட குறைக்கப்படவில்லை. மக்களுக்கு பிரயோஜனம் இல்லாத போராட்டங்களை நான் நடத்த மாட்டேன்.
மழை வெள்ளத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து 40 எம்.பி.,களை மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளனர். இவர்களில் 12 பேர் அமைச்சர்களாகவும் மத்திய அரசில் இடம்பெற்றுள்ளனர். வெள்ள நிவாரணப் பணிகளில் இவர்களின் போக்கு மெத்தனமாக இருக்கிறது.
தமிழகத்திற்கு போதிய நிவாரணம் கிடைக்க இவர்கள் அரசியல் பார்க்காமல் முயற்சிக்க வேண்டும். வேகமாக செயல்பட்டு, கிடைக்க வேண்டிய நிவாரணம் மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். சுனாமி நிவாரணத்தில் தவறு நடந்ததா, நடக்கவில்லையா என்று அரசியல் கட்சித் தலைவர்கள் ஆறு மாதங்களுக்கு முன்பு பேசியிருக்க வேண்டும். இப்போது பேச வேண்டியதில்லை. இப்போது வெள்ள நிவாரணம் தான் மக்களுக்கு முக்கியம்.
தமிழகத்தில் வெள்ள நிவாரணம் பலருக்கு கிடைத்திருக்கிறது. பலருக்கு கிடைக்கவில்லை. நான் சுற்றுப்பயணம் சென்ற பகுதிகளில் மக்கள் சொன்னதை வைத்து இதை தெரிந்து கொண்டேன். வெள்ள நிவாரணம் குறித்து பிரதமரை சந்தித்து பேச கட்சித் தலைவர்கள் டில்லி செல்கிறார்கள். நான் டில்லிக்கு செல்ல மாட்டேன். கண்துடைப்பு நாடகம் நடத்த நான் விரும்பவில்லை.
கருணாநிதியை பற்றி நான் மறைமுகமாக பேசுவதாக கூறுகிறீர்கள். நான் எந்தத் தலைவரின் பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை. பொதுவாகத்தான் பேசுகிறேன். என்னை தெலுங்கர் என்று குறிப்பிட்டு, இவர் தமிழகத்திற்கு என்ன செய்யப் போகிறார் என்று அரசியல் தலைவர்கள் பேசுவதாக கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர்., கட்சி துவங்கிய போது அவரை மலையாளி என்று சொன்னார்கள். என்ன ஆச்சு? என்னை யார் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். அதுபற்றி எனக்கு கவலை இல்லை. அரசில் பதவிப் பிரமாணம் எடுக்கும் அமைச்சர்கள் ஜாதி, மதம் பற்றி பேசமாட்டேன் என்றும் பதவி ஏற்கின்றனர். இதற்கு பிறகு பதவிப் பிரமாணத்திற்கு எதிராக பேசலாமா?
தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கும் எண்ணம் இல்லை. தனித்து தான் எனது கட்சி போட்டியை சந்திக்கும். 120 இடங்களில் போட்டியிட உத்தேசித்திருக்கிறோம். நான் தேர்தலில் போட்டியிடுவேனா, எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. எனது கட்சியில் பெண்களுக்கு எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு என்றும் முடிவு செய்யவில்லை.
கோயம்பேடு நுõறடி சாலையில் உள்ள எனது இடத்தில் தான் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் கட்டியிருக்கிறேன். கோயம்பேடு பாலம் அமைக்க இடைஞ்சாலாக இருக்கிறது என்று அரசு மூலம் எந்தக் கடிதமும் எங்களுக்கு இதுவரை வரவில்லை. வந்தால் பார்ப்போம். அப்படியே வந்தாலும் அதில் ஏதும் உள்நோக்கம் கொண்டதாகத் தான் இருக்கும்.
இப்பிரச்னை குறித்து நான் தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசவில்லை. நான் நடித்த "சுதேசி' பட பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. முழுவதுமாக கட்சிப் பணிகளில் இறங்கிவிட்டேன். இனி நேரம் கிடைத்தால் தான் சொந்தப் படத்தில் நடிப்பேன்.
தமிழகத்தில் உள்ளவர்கள் யாரும் தமிழின் மீது பற்று இல்லாதவர்கள் இல்லை. அப்படியிருக்க தமிழை வாழ வைக்கிறோம் என்று கூறி சுயவிளம்பரத்திற்காவும், அரசியல் நடத்துவதற்காகவும் தமிழையும், சினிமாவையும் பயன்படுத்திக் கொள்பவர்கள் பற்றி எனது கருத்தை சொல்லித்தான் மக்களுக்கு தெரிய வேண்டுமென்பதில்லை. யார் எதை எப்படி கையாண்டு விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள் என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும்.